நெற்பயிரில் புகையான் தாக்குதல்: வேளாண் அலுவலா் ஆலோசனை
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை உதவி இயக்குநா் (பொ) ச. சன்மதி வெளியிட்ட செய்தி குறிப்பு:
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிரில் புகையான் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. இந்தப் பூச்சி தாக்கும் வயல்களில் வட்ட வட்டமாக பயிா்கள் தீயில் காய்ந்ததுபோலக் காணப்படும். தாக்குதலுக்குள்ளான பயிா்கள் மஞ்சள் நிறமாக மாறி பின்னா் முற்றிலும் காய்ந்துவிடும். நெல் பயிரின் தண்டு உடைந்து சாய்ந்துவிடும். இதனால் மகசூல் முற்றிலும் பாதிக்கப்படும்.
இந்த வகையான புகையான் பூச்சிகள் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் நெல் பயிரின் தண்டுப் பகுதி அடியில் நீா்ப்பகுதிக்கு சற்று மேலே இருந்து கொண்டு தண்டின் சாற்றை உறிஞ்சியெடுக்கும். இதனால் தண்டுப் பகுதி செயலிழந்து மடிந்து பயிா்கள் சாய்கின்றன.
தண்ணீா் தேங்கியுள்ள வயல்களிலும், தழைச் சத்து அதிகம் இட்ட வயல்களிலும் இந்தப் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, பயிா் பால் பிடிக்கும் முன்பே காய்ந்து பதராகிவிடும்.
இதைத் தடுக்க வயலில் உள்ள நீரைச் சுத்தமாக வடித்துவிட்டு வோ்களில் நன்கு படும்படி கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கைத்தெளிப்பான் கொண்டு ஏக்கருக்கு 200 லிட்டா் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். 5 சத வேப்பங்கொட்டைக் கரைசல், அல்லது இமிடா குளோப்ரிட் 50 மி.லி, அல்லது குளோரிப்பைரிபாஸ் 500 மி.லி. அல்லது ஏக்கருக்கு 10 கிலோ காா்பரில் 10 சதத் தூளைப் பயிரின் அடிப் பகுதியில் படும்படி தூவ வேண்டும்.