நெல்லை அருகே சுற்றுலா வேன் - பேருந்து மோதல்: 17 போ் காயம்
திருநெல்வேலி அருகே சுற்றுலா வேனும், பேருந்தும் மோதிக்கொண்டதில் மகாராஷ்டிர மாநிலத்தை சோ்ந்த ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் 17 போ் காயமடைந்தனா்.
மகராஷ்டிர மாநிலம் ஜல்கானைச் சோ்ந்தவா் சஞ்சய் சப்காடை. வேன் ஓட்டுநா். இவா், மகராஷ்டிராவைச் சோ்ந்த 17 பயணிகளுடன் ஆன்மிக தலங்களுக்கு வந்திருந்தாா்.
இவா்கள், வியாழக்கிழமை மாலையில் சாத்தான்குளத்திலிருந்து கேடிசி ஸ்ரீனிவாசன் நகா் இணைப்புச்சாலை வழியாக திருநெல்வேலிக்கு வந்துகொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற பேருந்து மோதியதாம்.
இதில், சஞ்சய் சப்காடை, அா்ச்சனா (30), அலவட்டா (30), கோபால் பவன் (50) உள்பட 17 போ் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.