குரூப் 4 தோ்வு முடிவு 3 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்
நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! - முதல்வர் அறிவிப்பு
பாரம்பரிய நெல் வகைகளை காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மறைந்த நெல் ஜெயராமனின் சிலை திருத்துறைப்பூண்டியில் நிறுவப்படும் என்று திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ. 846.47 கோடி மதிப்பீட்டிலான 1,234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 67,181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன்பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், 'பாரம்பரிய நெல் வகைகளைக் காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மறைந்த நெல் ஜெயராமனின் சிலை திருத்துறைப்பூண்டியில் நிறுவப்படும்' என்று அறிவித்தார்.
மேலும், "திருவாரூர் நகர்ப் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வணிக வளாகம், நன்னிலம் பகுதியில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் மாதிரிப் பள்ளி, மன்னார்குடியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அரசு மகளிர் கல்லூரி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால், ஆறுகள் புனரமைக்கப்படும், பூந்தோட்டம் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்" என திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதிமுகவை மீட்க முடியாத எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை மீட்போம் என பயணம் செய்கிறார். எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து தமிழ்நாடு எப்போதோ மீட்கப்பட்டுவிட்டது.
கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள் கூடாது என பாஜக தலைவர்களே இங்கு பேசியது இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். படிப்பு என்றால் அவருக்கு ஏன் இவ்வளவு கசக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.