ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு
நேபாள கலவரத்தில் இந்திய பெண் பலி!
நேபாளத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்ற காஜியாபாத்தைச் சேர்ந்த பெண், இளைஞர்களின் கலவரத்தில் பலியானார்.
நேபாள அரசுக்கு எதிராக கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இளைஞர்களின் போராட்டம் கலவரமாக வெடித்தது. போராட்டத்தை ஒடுக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 19 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், அதிபர், பிரதமர், அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.
அப்போது, காத்மண்டுவில் உள்ள நட்சத்திர விடுதிக்கு இளைஞர்கள் தீ வைத்ததில், 55 வயதுடைய இந்திய பெண் பலியாகியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த ராம்வீர் சிங் (58) மற்றும் அவரது மனைவி ராஜேஷ் தேவி ஆகியோர் நேபாளத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றுள்ளனர்.
காத்மண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைக் காண்பதற்காக செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், செப்டம்பர் 9 ஆம் தேதி நட்சத்திர விடுதிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். விடுதி முழுவதும் தீ பரவியதால் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தரை தளத்தில் படுக்கைகளை போட்டு, அனைவரையும் மீட்புப் படையினர் குதிக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.
இதில், நான்காவது மாடியில் இருந்து குதித்த ராஜேஷ் தேவி, தலையில் பலத்த காயமடைந்து பலியாகியுள்ளார். அவரது கணவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.
இதனைத் தொடர்ந்து, உ.பி. மகாராஜ் கஞ்ச் பகுதியில் உள்ள சோனாலி எல்லை வழியாக ராஜேஷ் தேவியின் உடல் வியாழக்கிழமை காஜியாபாத்துக்கு கொண்டுவரப்பட்டது. இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
இந்த கலவரத்தை தொடர்ந்து காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், நூற்றுக்கணக்கான இந்திய சுற்றுலாப் பயணிகள் நேபாளத்திலேயே சிக்கித் தவித்து வருகின்றனர்.