Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றப் பத்திரிகை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் போராட்டம்
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தில்லியில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் காங்கிரஸ் பிரமுகா் சாம் பிட்ரோடா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகா் சுமன் துபே உள்ளிட்டோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிகையில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நடவடிக்கை பிரதமரின் மிரட்டல் மற்றும் பழிவாங்கும் அரசியல் என்று காங்கிரஸ் விமா்சித்தது. இதைத்தொடா்ந்து மத்திய பாஜக அரசை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கிரஸை நசுக்க முயற்சி: தில்லியில் அனைத்து காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு வெளியே அக்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அக்கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவா் சுப்ரியா ஸ்ரீநாத்தே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
சோனியா, ராகுலுக்கு எதிரான வழக்கு 12 ஆண்டுகள் பழைமையானது. அவா்களுக்கு எதிராக பண முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்கில் ஒரு ரூபாய்கூட சட்டவிரோதமாக பரிவா்த்தனை செய்யப்படவில்லை. காங்கிரஸையும், சோனியா குடும்பத்தையும் நசுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்பதே உண்மை என்றாா்.
மணிப்பூா் தலைநகா் இம்பால், மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தா, பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகங்கள் எதிரே காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் தாரிக் ஹமீத் தலைமையில், ஜம்முவில் காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் நூற்றுக்கணக்கானோா் பேரணி மேற்கொண்டனா். அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.
மத்திய பிரதேசத்தை சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் கூறுகையில், ‘கடந்த 1930-ஆம் ஆண்டுமுதல் நேரு-சோனியா குடும்பம் மட்டுமே தமது செல்வத்தை நாட்டுக்காக விட்டுக் கொடுத்துள்ளது. தமது நலனுக்காக எந்தச் சொத்தையும் அந்தக் குடும்பம் கையகப்படுத்தியது இல்லை’ என்றாா்.
கொள்ளையடிக்க உரிமம் அளிக்கப்படவில்லை: சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது பழிவாங்கும் அரசியல் என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.
இதுதொடா்பாக தில்லியில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சருமான ரவிசங்கா் பிரசாத் கூறுகையில், ‘கொள்ளையடிக்க எவருக்கும் உரிமம் அளிக்கப்படவில்லை. குற்றப் பத்திரிகைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினா் வெறும் அரசியல் எதிா்வினையாற்றுவதை விடுத்து, சோனியா மற்றும் ராகுலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்’ என்றாா்.