இயக்குநராகும் முழுத் தகுதியும் மணிகண்டனுக்கு உண்டு: சிவகார்த்திகேயன்
பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலமா? கே.என். நேரு பதில்
திருச்சி: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலம் இருந்தால் அதனை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் கே.என். நேரு கூறியிருக்கிறார்.
விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.
இந்த விழாவிற்கு பின்பு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்சி பஞ்சப்பூரில் எனக்கு சொத்து இருந்தால் அரசோ, மக்களோ எடுத்துக் கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் கையெழுத்து போடுகிறேன். எனக்கும் என் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அங்கு இடம் இல்லை. நான் முதல்வர் குடும்பத்துடன் சண்டை போடவில்லை. இணக்கமாக உள்ளேன் என்று கூறியிருக்கிறார்.
அதிமுக கூட்டத்திற்கு வந்தவருக்குத்தான், உடம்பு சரியில்லை என ஆம்புலன்ஸை அழைத்தார்கள். ஆனால், ஆம்புலன்ஸை ஓட்டி வந்தவர்களை போட்டு அடிக்கிறார்கள் இதில் என்ன நியாயம் இருக்கிறது?
ஆம்புலன்ஸை தாக்குவது ரொம்ப தப்பு. முதல்வர் பேசும் பொழுது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆம்புலன்ஸ் வந்தால் பேச்சை நிறுத்தி உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பிவிடுவார். ஆனால் அதிமுக பிரச்சனை செய்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.
எல்லா செய்திகளும் மக்களை சென்றடைகிறது. யார் எப்படி நடந்து கொண்டிருந்தாலும் மக்கள் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.
பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே உங்களுக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி நேற்று மேற்கு தொகுதி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் பேசியுள்ளார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த நேரு, எங்களுக்கு சொந்தமான நிலம் இருந்தால் பொதுமக்கள் எடுத்துக் கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் எடுத்துக் கொள்ளலாம். நகராட்சி எடுத்துக் கொள்ளலாம். அங்கு எங்கு 300 ஏக்கர் நிலம் உள்ளது. எனக்கு எந்த நிலம் இருந்தாலும் அதனை அரசுக்கு சொந்தமாக எடுத்துக் கொள்ளலாம்.எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் கையெழுத்து போட்டுத் தருகிறேன். பழனிசாமியே வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளலாம்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததே தங்களை பாதுகாத்துக் கொள்ள தான் கூட்டணி வைத்துள்ளார் என நாங்கள் ஏற்கனவே பேசி வருகிறோம். இப்பொழுதும் சொல்கிறோம். அவர்களைப்போல எங்களை நினைக்கிறார் என்று அமைச்சர் நேரு கூறினார்.