ஈரோடு இடைத்தேர்தல்: ``நிச்சயம் நியாயமாக நடக்காது என்பதால்..'' -எடப்பாடி பழனிசாமி...
பஞ்சாப்: விபத்தா? தற்கொலையா? - துப்பாக்கியைத் துடைக்கும்போது உயிரிழந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் குர்பிரீத் கோகி. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குர்பிரீத் நேற்று 11 மணியளவில் தனது வீட்டில் தனது துப்பாக்கியை எடுத்து துடைத்துக்கொண்டிருந்தார். அந்நேரம் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டுப் பக்கத்து அறையில் உறங்கிக்கொண்டிருந்த உறவினர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வந்தபோது குர்பிரீத் தலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரை மருத்துவர்கள் சோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்திருந்தார். இது குறித்து எம்.எல்.ஏ. உறவினர்கள் கூறுகையில், ''எம்.எல்.ஏ.இரவு தனியாகத் தனது அறையில் அமர்ந்து துப்பாக்கியைத் துடைத்துக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது'' என்று தெரிவித்தனர்.
அவர் கையிலிருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியவில்லை. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 58 வயதாகும் குர்பிரீத் கடந்த 2022ம் ஆண்டுதான் ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்று ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரவு பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகருடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.