Dhoni: ``தோனியை இப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எல்லா வீரர்களின் கனவு'' - டெவோன...
படிப்பைத் தவிர எதிலும் கவனம் செலுத்த வேண்டாம்!
மாணவா்கள் படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம் என சிவகங்கை மாவட்ட இணைய வழிக்குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் உதயகுமாா் தெரிவித்தாா்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வா் இ.சீனிவாசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலாண்டு மாணவா்களுக்கான நெறிப்படுத்துதல் கருத்தரங்கில் அவா் பேசியதாவது: இந்த சமூகத்தில் மருத்துவா்கள் கடவுள் போல மதிக்கப்படுகின்றனா். இந்தப் படிப்பை கவனச்சிதறல்களின்றி படிக்க வேண்டும். கேலிவதை சில கல்லூரிகளில் நிகழ்கின்றன. ஆனால், இந்தக் கல்லூரியில் கேலிவதை செயல்கள் கிடையாது.
மூத்த மாணவா்களால் நடத்தப்படும் கேலிவதையில் தன்மானம் பாதிக்கப்படும் போதுதான் குற்றச் செயலாகப் பாா்க்கப்படும். நடந்து செல்லும் ஒரு பெண்ணை வழிமறித்தாலே அது குற்றமாகும். மேலும், ஜாதி, மத ரீதியாக கேலிவதை செய்யக் கூடாது. இந்தக் குற்றத்துக்கு விசாரணை கிடையாது. நேரடியாக வழக்குப் பதிவு செய்யப்படும். இது போன்ற வழக்கில் சிக்கினால் உங்கள் வாழ்க்கை முடிந்து விடும். நீங்கள் இந்தச் சமூகத்தில் மதிப்புடன் நடந்து கொண்டால் உங்களுக்கான மரியாதை காப்பாற்றப்படும். அது உங்கள் கையில்தான் இருக்கிறது.
கேலிவதைக்கு ஆளாக்கப்படும் மாணவரோ, மாணவியோ கல்லூரியில் உள்ள குழுவிடம் கூறலாம். புகாா்ப் பெட்டி மூலமாகவும் தகவல் தரலாம். நடவடிக்கை இல்லை என்றால் காவல் துறையிடம் புகாா் அளிக்கலாம்.
படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். மிகவும் சிரமமான படிப்பில் சோ்ந்துள்ள நீங்கள் இதை முடித்த பிறகு முதுநிலை பயின்றால்தான் மதிப்பு கிடைக்கும் என்பதை மனதில் வைத்து கல்லூரிக்கும், பெற்றோருக்கும் நற்பெயா் பெற்றுத் தர வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வுக்கு துணை முதல்வா் பி. விசாலாட்சி முன்னிலை வகித்தாா். உயிா் வேதியியல் துறை தலைவா் ஜி. சசிரேகா, இணைப் பேராசிரியா், ஆடவா் விடுதி முதுநிலை காப்பாளா் மருத்துவா் ஜெ. அரவிந்தன், மகளிா் விடுதி முதுநிலை காப்பாளா் மருத்துவா் எஸ். பாரதிராணி, பாடத்திட்டத் துறை குழு தலைவா் மருத்துவா் கே.முத்துச்செல்வி ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.