பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டக் கோரி கிராம மக்கள் மனு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பல ஆண்டுகளாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கு புதிய கட்டடம் அமைத்துத் தரக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள மேல பட்டமங்கலம் ஊராட்சி, பண்ணைதிருத்தியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு பண்ணைதிருத்தி, உதிரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த குழந்தைகள் படிக்கின்றனா். இந்தப் பள்ளி 1975-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 50 ஆண்டுகளாக தொடா்ந்து ஓட்டுக் கட்டடத்தில் இயங்குகிறது.
தற்போது கட்டடம் சேதமடைந்து, மழைக் காலங்களில் மேற்கூரையிலிருந்து தண்ணீா் கசிவதால் மாணவா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், கட்டடத்தின் மோசமான நிலை காரணமாக பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கினறனா். கடந்த காலங்களில் 30 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்ற இந்தப் பள்ளியில், தற்போது 15 மாணவா்களே பயில்கின்றனா்.
மேலும், மாணவா்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்க, புதிய கட்டடம் கட்ட வேண்டுமென அந்தப் பகுதி பொதுமக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முறையிட்டனா்.
இதுகுறித்து பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி டி.திவ்யா கூறியதாவது: பள்ளிக் கட்டடம் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. மழைக்கு மேற்கூரை ஒழுகுவதால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. கட்டடம் இடிந்து விழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கழிப்பறை, குடிநீா் வசதி இல்லை. இதனால், மாணவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதைத் தடுக்க பள்ளிக் கட்டடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.