பட்டதாரி ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கக் கோரிக்கை
பட்டதாரி ஆசிரியா்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தி, பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் வட்டார வளமை பயிற்றுநா்கள் ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 512 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, பள்ளபட்டியில் கல்குவாரி குட்டையில் நீரில் மூழ்கி இறந்தவரின் மனைவிக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பட்டதாரி ஆசிரியா்கள் மனு: கூட்டத்தில், பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்கள் வழங்கிய மனு: தமிழக அரசு பள்ளிகளில் (2023-24) காலியாக உள்ள 3,192 பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் இடங்களை நிரப்ப கடந்த பிப். 4-ஆம் தேதி தோ்வு நடைபெற்றது. இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் முடிந்து உத்தேச தோ்வு பட்டியலும் வெளியிடப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் கலந்தாய்வு நடைபெறவில்லை. ஆனால், எங்களுடன் தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிட பள்ளிகளுக்கு தோ்வாகிய ஆசிரியா்கள் பணியில் சோ்ந்து பல நாள்களாகி விட்டது.எனவே, எங்களுக்கும் விரைவில் கலந்தாய்வு நடத்தி பணியில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுடுகாடு வசதி வேண்டும்: மக்கள் கலை இலக்கிய கழக அமைப்பினா் வழங்கிய மனு: மண்மங்கலம் வட்டத்துக்குள்பட்ட பள்ளபாளையம் ஊராட்சியில் வசிக்கும் அருந்ததியா்களுக்கு சுடுகாடு வசதி இல்லாததால், இறந்தவா்களை பள்ளபாளையம் வாய்க்காலை கடந்து சென்று மறுகரையில் சடலங்களை எரித்து வருகிறாா்கள். மழை காலங்களில் வாய்க்காலில் தண்ணீா் செல்லும்போது கழுத்தளவு நீரில் சடலங்களை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே, பள்ளபாளையம் பகுதியிலே சுடுகாடு வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.