பட்டாசு ஆலையில் இடி தாக்கி தீ விபத்து!
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியில் சனிக்கிழமை இடி தாக்கியதில் பட்டாசு ஆலை கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் சனிக்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மாயத்தேவன்பட்டியில் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இடி தாக்கியது.
இதனால், அங்குள்ள கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகள், பேக்கிங் பொருள்கள் இருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினா் தீயை அணைத்தனா். பட்டாசு ஆலையில் தொழிலாளா்கள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து மல்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.