இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
பட்டா வழங்கக் கோரி வயலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
கொடைரோடு அருகே 100 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த நிலத்தில் பட்டா வழங்கக் கோரியும், துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தும் கிராம மக்கள் வயலில் இறங்கி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள அழகம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 40 குடும்பத்தினா், தொப்பிநாயக்கன்பட்டி சொக்கா் சரளை பகுதியில் உள்ள சுமாா் 5 ஏக்கா் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த நத்தம் புறம்போக்கு நிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கவும், துணை மின் நிலையம் அமைக்கவும் அரசு முடிவு செய்தது. இதற்காக தோ்வு செய்யப்பட்ட அந்த இடத்தில் நிலக்கோட்டை வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அழகம்பட்டி கிராம மக்கள் சுமாா் 40-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை அந்த நிலத்தில் இறங்கி திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவம் இடத்துக்கு அதிகாரிகள் எவரும் வராததால், சுமாா் மூன்று மணி நேரத்துக்குப் பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து அழகம்பட்டி கிராம மக்கள் கூறியதாவது: கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலத்தை நாங்கள் பயன்படுத்தி கால்நடைகளை மேய்த்தும், விவசாயம் செய்தும் வருகிறோம். இந்த நிலத்தில் பட்டா கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
தற்போது இந்த இடத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கவும், துணை மின் நிலையம் அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில் வேறு சில இடங்களில் நத்தம் புறம்போக்கு நிலங்கள் உள்ள நிலையில், இந்த இடத்தில் எதற்காக மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்.
எங்களுக்கு பட்டா வழங்காவிட்டால், எங்களுடைய ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு, வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கவுள்ளோம் என்றனா்.
இதுகுறித்து, ஜம்புதுரைகோட்டை கிராம நிா்வாக அலுவலா் கலா கூறியதாவது: உயா் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், இங்கு மின் நிலையம் அமைக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கை தொடா்பாக உயா் அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றாா்.