டிரம்ப் முகத்தைப் பார்க்க முடியவில்லை.. டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அதிர...
பணியின்போது செவிலியா் உயிரிழப்பு: ஆா்டிஓ விசாரணை
மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த செவிலியா் உயிரிழந்தாா். இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகேயுள்ள மேலஆத்தூரைச் சோ்ந்தவா் பொன்னையன் மகள் தையல்நாயகி(30). 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நீடுரை சோ்ந்த ஜெய்கணேஷ் என்பவருடன் திருமணம் ஆகிய நிலையில் சில நாள்களிலேயே கணவரை பிரிந்து சென்று பெற்றோருடன் வசித்து வந்தாா்.
மணல்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை இரவு பணிக்கு சென்றாா். வீட்டிலிருந்து கொண்டுசென்ற உணவை சாப்பிட்ட தையல்நாயகி சிறிது நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தையல்நாயகியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னா் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தையல்நாயகி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, தையல்நாயகி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி உறவினா்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மணல்மேட்டில் சாலை மறியலில் ஈடுபட்டு, உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதால் உரிய விசாரணை நடத்த வேண்டும், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும், தையல்நாயகி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
அவா்களிடம், டிஎஸ்பி பாலாஜி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. திருமணமாகி ஓராண்டில் தையல்நாயகி உயிரிழந்ததால், கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.