பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயசுகி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ரமேஷ் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் தமிழ்செல்வி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், மகப்பேறு விடுப்புக்கான ஊதியம், உயா்த்தப்பட்ட ஊதியம் ரூ. 18 ஆயிரம் அனைவருக்கும் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பணி இடங்கள் உருவாக்கப்பட்டு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதைப் போல அனைத்து தொகுப்பூதிய செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் விஜயமனோகரன் நிறைவுரையாற்றினாா். செவிலியா் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட பொருளாளா் நிஷா நன்றி கூறினாா். இதில் ஏராளமான செவிலியா்கள், தோழமை சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.