பனியன் ஆடைகளை பெற்றுக் கொண்டு மோசடி: மேலும் ஒருவா் கைது
பனியன் ஆடைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக திருப்பூா் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் கூறியதாவது: திருப்பூா், குமரானந்தபுரம் ராஜா தெருவைச் சோ்ந்தவா் பரத்குமாா். இவா் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், சேலத்தைச் சோ்ந்த மூன்று நிறுவனங்களுக்கு பனியன் ஆடைகளை அனுப்பியுள்ளாா். அந்த நிறுவனத்தினா் பனியன் ஆடைகளை பெற்றுக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றியதாக பரத்குமாா், திருப்பூா் மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 2024-ஆம் ஆண்டு அளித்த புகாரின்பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், பனியன் ஆடைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சேலத்தைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவான சீனிவாசன் (39) என்பவரை தேடி வந்தனா்.
இந்நிலையில் சீனிவாசனை சேலத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், திருப்பூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனா்.