மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி
பன்றி மேய்ப்பவரை வில்லனாகக் காட்டியதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்: வசந்த பாலன்
பன்றி மேய்ப்பவரை வில்லனாகக் காட்டியதற்காக மன்னிப்புக் கேட்பதாக இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.
நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இயக்குநர் பா. இரஞ்சித் ஒவ்வொரு ஆண்டும் கலை நிகழ்ச்சிகளையும் திரைப்பட விழாவையும் நடத்தி வருகிறார்.
இந்தாண்டும் நீலம் சார்பாக பி.கே. ரோஸி திரைப்பட விழா ஏப். 2 முதல் ஏப். 6 வரை சென்னையில் நடைபெற்றது. இறுதி நிகழ்வான நேற்று (ஏப். 6) இயக்குநர்கள் பா. இரஞ்சித், வசந்த பாலன், பி.எஸ். வினோத்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய வசந்த பாலன், “நான் இயக்கிய வெயில் படம்தான் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம். இந்தப் படத்திற்காக 26 விருதுகளைப் பெற்றேன். அதேபோல், அங்காடித்தெரு திரைப்படம் பல விருதுகளைப் பெற்றுத்தந்தது. நான் இப்படியான திரைப்பட விழாக்களிலிருந்துதான் உருவானேன். யாரோ ஒருவருக்கு இந்த திரைப்பட விழாக்கள் கதவைத் திறக்கும் என நம்புகிறேன்.
பா. இரஞ்சித் வருவதற்கு முன் தலித், சாதி, அதிகாரம் குறித்த பார்வை வேறொன்றாக இருந்தது. ஆனால், பா. இரஞ்சித்தும் மாரி செல்வராஜும் வந்தபிறகு இந்தப் பார்வைகள் எல்லாம் மாறின. வெயில் திரைப்படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாகக் காட்டியதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறேன். கலையின் முக்கியமான பணி அரசியல்தான் என நினைக்கிறேன்.
பா. இரஞ்சித் அப்படி நிறைய விஷயங்களை அரசியல்படுத்தியிருக்கிறார். இயக்குநர்களிடம் நிறைய பணம் இருந்தால், மண்டபம் கட்டுவார்கள், கொடைக்கானலில் இடம் வாங்குவார்கள். ஆனால், ரஞ்சித் ’கூகை’ என்கிற நூலகத்தைத் துவங்கினார். அவர் ஏற்றி வைத்த அகழ் விளக்கு அழகாக எரிகிறது. அவரை மிகக் கவனமாக பாதுகாக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிக்க: ஜூலையில் வாடிவாசல் படப்பிடிப்பு!