பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தேசம்: சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தோலுரித்த இந்தியா!
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தேசம் என்று கடுமையான சொற்களால் ஐ.நா. அவையில் இந்தியா விமர்சித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் ’வோட்டான்’ என்படும் பயங்கரவாதத் தொடர்பு குழுக்களால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டு பேசிய தூதர் யோஜ்னா படேல், உலகளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்குமொரு தேசமாக பாகிஸ்தான் திகழ்கிறதென விமர்சித்தார்.
அவர் பேசியதாவது: “இந்தியா மீது ஒரேயொரு உறுப்பினர் (பாகிஸ்தான்) மட்டும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. அண்மையில் பேட்டியொன்றில் பேசிய பாகிஸ்தானின் அமைச்சர், தங்கள் தேசம் கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்து வந்திருப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இதனை உலக நாடுகள் பார்க்கத் தவறவில்லை. இதன்மூலம், இப்பகுதியில் அவர்கள் அமைதியை சீர்குலைப்பது தெளிவாகிறது. இனிமேலும், உலகம் கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என்றார்.
“கடந்த 2006-ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்டிருந்த கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப்பின், பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்திருப்பதென்பது பஹல்காமில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலால்தான். எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, இதனால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள், அந்த சமூகம் மற்றும் தனிநபர்களின் மீது நெடுங்காலம் இருக்கும் அதன் தாக்கத்தை புரிந்துகொண்டு செயல்படுகிறது”.
”பஹல்காம் தாக்குதலை கண்டித்து கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, ஊடுருவல்காரர்கள், பயங்கரவாதச் செயல்களை அனுமதிப்பவர்கள், அரங்கேற்றுபவர்கள், அதற்கான நிதியுதவி செய்வோர் யாராக இருப்பினும், அவர்கள் பொறுப்பேற்றுக்கொள்வதுடன் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்தும் எந்தவொரு விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவே முடியாதென்பதில் இந்தியா தமது நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளது” என்றார்.