பயங்கர நிலநடுக்கம்: பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம்
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று மதியம் 1 மணியளவில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் எதிரொலித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏராளமான கட்டடங்கள் இடித்து தரைமட்டமாகியிருக்கிறது.
மிகப்பெரிய கட்டடங்கள் இருந்த இடங்கள் ஒரு சில நொடிகளில் கட்டடக் குவியல்களாக மாறியிருக்கிறது. வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை ஒலி ஒலித்ததால், மக்கள் வெளியேறியதால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ, ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் இரண்டு முறை உணரப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் 7.7 என்ற அளவிலும், இரண்டாவது 6.4 என்ற அளவிலும் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு, இந்தியாவின் வட மாநிலங்களிலும், வங்கதேசம், சீனா வரை பரவியிருந்தது.
பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த உயரமான கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 2 தொழிலாளர்கள் பலியாகினர். 40 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மியான்மரில் இருந்த மசூதி இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.