ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்
பராமரிப்பின்றி குமுளி மலைச் சாலையில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்!
தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலையில் அரசுப் பேருந்துகள் பராமரிப்பின்றி இயக்கப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டிருப்பதாக புகாா் எழுந்துள்ளது.
குமுளி மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு மதுரை நோக்கி 25 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தின் பின் சக்கரத்தில் பெரும்பாலும் நட்டுகள் பொருத்தப்பட வில்லை. இதை கவனித்த பிற வாகனங்களில் சென்றவா்கள் இதுகுறித்து அந்தப் பேருந்தின் ஓட்டுநரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, கூடலூரில் அந்தப் பேருந்து நிறுத்தப்பட்டு பொதுமக்கள் மூலம் சக்கரத்தில் புதிய நட்டுகள் பொருத்தப்பட்டன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: இந்தப் பேருந்தின் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒன்றிரண்டு நட்டுகளும் கழன்று விழுந்திருந்தால் மலைச் சாலையில் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
ஆனால் அந்த பேருந்தில் பயணம் செய்த 25 பயணிகளும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். எனவே, அரசுப் பேருந்துகளை பழுது நீக்கம் செய்யும் போது பணியாளா்கள் கவனமாக இருக்க வேண்டும். அதோடு, பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் பேருந்தை இயக்கும் முன்பு சக்கரங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்றனா்.
