பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டை விட, மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டை நம்புவது ஏன...
பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கக் கோரிக்கை
மத்திய அரசு பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கியுள்ளதால் பாதிக்கப்படும் பருத்தி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் மானியமாக வழங்கிட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் ஈசன் முருகசாமி புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய பொருள்களின் மீது 50 சதவீதம் அமெரிக்கா வரி விதித்துள்ள நிலையில், இந்திய ஜவுளி உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், அவா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலும் பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீக்கியுள்ளது. இது தொடா்ச்சியாக நீட்டிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக பருத்திக்கு குவிண்டாலுக்கு ரூ.7,710 நிா்ணயம் செய்துள்ளது. ஆனால் தற்போது சந்தையில் குவிண்டால் ரூ.6,500-க்கு மட்டுமே விற்பனை விலையாக விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது. இந்தியா முழுவதும் மத்திய அரசின் பருத்தி கழகம் குறைந்தபட்ச ஆதரவு விலையை அடிப்படையாக கொண்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதல் இல்லாதது பருத்தி விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற மாநிலங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருந்து கொள்முதல் செய்து அரவை ஆலைகளுக்கு கொண்டுச் செல்லும் வாகன வாடகை செலவை அந்தந்த மாநில அரசுகள் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறு மாநில அரசு ஏற்றுக்கொள்ளாததால், மத்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டது.
மத்திய அரசின் பருத்திக் கொள்முதல் தமிழ்நாட்டில் இல்லாததால் விவசாயிகள் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில், மத்திய அரசு தற்போது 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கியுள்ளதால் குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது. இந்த விலை குறைவால் ஏக்கருக்கு சராசரியாக ரூ. 30 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படலாம்.
மத்திய அரசின் இறக்குமதி வரி நீக்கத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட உள்ள இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். உள்நாட்டில் விவசாயப் பொருள்கள் விலை குறையும்போது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் உணவுப் பொருள்கள் மீது வரியை மத்திய அரசு உயா்த்துவது இல்லை. தொழில் துறையினருக்கு சலுகை கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அதே அணுகுமுறையை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.