பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
பல்கலைக்கழக கைப்பந்து போட்டி: கன்னியாகுமரி கல்லூரி அணி வெற்றி
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே ஆண்களுக்கான கைப்பந்து போட்டிகள் கோவில்பட்டி கே.ஆா். கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.
இதில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்டங்களை சாா்ந்த மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த 39 அணிகள் கலந்துகொண்டன.
செப். 22 ஆம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி அணியும், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்டின் கல்லூரி அணியும் மோதியதில் ஸ்காட் கிறிஸ்டின் கல்லூரி அணி 3 - 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
2-வது அரையிறுதிப் போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணியும், கன்னியாகுமரி ஜெரோம்ஸ் கல்லூரி அணியும் மோதியதில் ஜெரோம்ஸ் கல்லூரி அணி 3 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3, 4-வது இடங்களுக்கான போட்டியில் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி அணியும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணியும் மோதியதில் விவேகானந்தா கல்லூரி அணி 2 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பல்கலைக்கழக அளவில் 3ஆம் இடம் பிடித்தது.
இறுதிப் போட்டியில் கன்னியாகுமரி ஜெரோம்ஸ் கல்லூரி அணியும், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்டின் கல்லூரி அணியும் மோதியதில் ஜெரோம்ஸ் கல்லூரி அணி 3 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பல்கலைக்கழக அளவில் முதலிடத்தைப் பிடித்தது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். இதில், கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா் . அருணாச்சலம், நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயக்குநா் சண்முகவேல், கல்லூரி முதல்வா்கள் காளிதாச முருகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), மதிவாணன் (கே.ஆா். கலை, அறிவியல் கல்லூரி), ராஜேஸ்வரன் ( லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி) உள்பட பலா் கலந்து கொண்டனா்.