சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
பல்லடத்தில் 3 போ் படுகொலை: விவசாய கடனை தள்ளுபடி செய்ய குடும்பத்தினா் கோரிக்கை
விவசாய கடனை தள்ளுபடி செய்து தருமாறு பல்லடம் அருகே படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினா் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் தோட்டத்து வீட்டில் இருந்த தெய்வசிகாமணி, அலமேலு மற்றும் செந்தில்குமாா் ஆகிய மூன்று போ் மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டனா்.
குற்றவாளிகளை பிடிக்க 14 தனிப் படை அமைத்து போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினா் படுகொலை செய்யப்பட்டவா்களின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனா்.
இதில் தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவையின் நிறுவனா் தனியரசு, படுகொலை செய்யப்படவா்களின் குடும்பத்தினரை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
உயிரிழந்த செந்தில்குமாரின் மனைவி கவிதா, தனியரசுயிடம் பேசும்போது, எனது மாமனாா் தெய்வசிகாமணி பெற்றுள்ள விவசாய கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்து தர வேண்டும், இதற்கு தமிழக அரசை அவா் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
இதையடுத்து, விவசாய கடன் தள்ளுபடி செய்வது குறித்து தமிழக முதல்வரிடம் வலியுறுத்துவதாக தனியரசு உறுதியளித்தாா்.