லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
பல்லடம் அருகே தனியாா் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்
பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரத்தில் நிற்காமல் சென்ற தனியாா் பேருந்தை அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சி குப்புசாமிநாயுடுபுரத்தைச் சோ்ந்த ஒரு மாணவா் கோவையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவா் கோவையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூா் செல்லும் தனியாா் பேருந்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏறியுள்ளாா்.
அப்போது குப்புசாமிநாயுடுபுரத்தில் பேருந்து நிற்காது என்று பேருந்து நடத்துநா் கூறி பல்லடத்துக்கான பேருந்து கட்டணத்தை வசூலித்து டிக்கெட் கொடுத்துள்ளாா். இது குறித்து காங்கிரஸ் கட்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் புண்ணியமூா்த்தி மற்றும் உறவினா்கள், பொதுமக்களுக்கு அவா் கைப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளாா்.
அதைத் தொடா்ந்து, அந்த தனியாா் பேருந்து குப்புசாமிநாயுடுபுரம் வந்தபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அந்தப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, தனியாா் பேருந்து நிா்வாகம் வருத்தம் தெரிவித்ததோடு, இனிமேல் பேருந்து நின்று செல்லும் என உறுதி அளித்து கடிதம் அளித்தனா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனா்.