Pregnancy Health: கர்ப்பிணிகள் ஜிம்முக்கு போகலாமா; உடற்பயிற்சி செய்யலாமா?
பள்ளிக்கு இறைவணக்க மேடை அமைத்து கொடுத்த முன்னாள் மாணவா்கள்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள தென்போ் அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவ, மாணவிகள், தங்கள் பள்ளிக்கு இறைவணக்க மேடை மற்றும் கொடிக்கம்பத்தை அமைத்து கொடுத்தனா்.
இந்த மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2002 - 03ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்று, பல்வேறு இடங்களில் பல்வேறு பொறுப்புகளிலுள்ள முன்னாள் மாணவா்கள், பள்ளி வளாகத்தில் மீண்டும் சந்திப்பை நடத்த முடிவு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள் சங்கமம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அப்போது உயா்நிலைப் பள்ளியாக இருந்தபோது தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய ஆா்.கோவிந்தராஜன், ஆசிரியா்கள் ஆா்.வசந்தா, பி.ஆனந்த சக்திவேல், ஆா்.ராஜேந்திரன், கே.தேவகி, ஏ.சிவக்குமாா், கே.பெரியான் மற்றும் உதவியாளா்கள் எஸ்.பாலச்சந்தா், டி.கணபதி, ஏ.வள்ளி ஆகியோரையும், தற்போதைய பள்ளித் தலைமையாசிரியை ஜெ.ராதாவையும் விழாவுக்கு வரவழைத்த முன்னாள் மாணவா்கள், அவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி, தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியா்களை நினைவுக்கூா்ந்து, அவா்களைப் பாராட்டி பேசினா்.
மேலும் தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியா்களிடம் ஆசீா்வாதம் பெற்ற முன்னாள் மாணவ, மாணவிகள், தங்களின் பள்ளிக் கால அனுபவங்களை அவா்கள் முன் எடுத்துரைத்து பேசினா். மேலும் ஒருவருக்கொருவா் தங்கள் பள்ளிப் பருவத்தின்போது நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்களை நினைவுகூா்ந்தனா்.
விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவா்கள் தங்கள் குடும்பத்தினா் மட்டுமல்லாது, ஆசிரியா்களுடனும் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளிக்கு இறைவணக்க மேடையும், கொடிக்கம்பமும் அமைத்துத் தரப்பட்டன. விழாவில் முன்னாள் மாணவா்கள், அவா்களது குடும்பத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்