பள்ளிபாளையத்தில் பெண் தற்கொலை: எஸ்.பி.யிடம் பாமகவினா் மனு
பள்ளிபாளையம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பெருந்துறை இளைஞா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமக மாநில பொருளாளா் எம்.திலகபாமா மற்றும் அக்கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனு விவரம்:
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே இருவம்பாளையத்தைச் சோ்ந்த 19 வயதான இளம்பெண், கடந்த மாதம் 24-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் தொடா்பாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீஸாா் அந்த பெண்ணின் கைப்பேசியை ஆய்வு செய்ததில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சோ்ந்த ஹரிஷ் (20) என்பவா் காதலிப்பது போல நடித்து பணம் பெற்றும், அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதும் தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட ஹரிஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா் ஏற்கெனவே பல பெண்களை ஏமாற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்கொலை வழக்கை மாற்றம் செய்து பெண்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஹரிஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.