Viduthalai 2: ``12 வருட காத்திருப்பு, 15 வருட போராட்டம்! இதுக்கு கிடைச்ச பலன் வி...
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் ரூ. 82,000 உதவித் தொகை பெறுவது எப்படி?
பிரதமர் உயர்கல்வி ஊக்கத் தொகை(பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்) என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 82,000 வரை மத்திய அரசு வழங்கி வருகின்றது.
ஏழ்மை காரணமாக ஒரு மாணவர்/மாணவியருக்கு உயர்க் கல்வி மறுக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்குகிறது.
இதையும் படிக்க : ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை: பிரதமர் மோடி!
தகுதியுள்ள மாணவர்கள்
குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
18 முதல் 25 வயதுடைய மாணவ/ மாணவியர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் 80 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தொலைதூர கல்வி முறையில் பயின்றவர்கள் ஊக்கத்தொகைக்கு தகுதியில்லை.
வருமான வரிச் சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
12ஆம் வகுப்பு முடித்து இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த(3+2 ஆண்டுகள்) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே தகுதி பெறுவர்.
தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கபட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.
மத்திய மற்றும் மாநில அரசின் வேறெந்த கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழும் பயன்பெறுபவராக இருக்கக் கூடாது.
இடை நிற்கும் மாணவர்கள் அல்லது கல்வி நிறுவனத்தால் நீக்கம் செய்யப்படும் மாணவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை நிறுத்தப்படும்.
ஒவ்வொரு ஆண்டுத் தேர்விலும் 50 சதவிகித மதிப்பெண்ணும் குறைந்தபட்சம் 75 சதவிகித வருகை பதிவேடும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இடஒதுக்கீடு சதவிகிதம்
மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும். பட்டியலினத்தை சார்ந்தவர்களுக்கு 15 சதவிகிதம், பழங்குடியினத்தவர்களுக்கு 7.5 சதவிகிதம், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரிவுகளின் கீழ் இடங்கள் நிரப்பப்படாத பட்சத்தில் இதர பிரிவினருக்கு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த திட்டத்துக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் போன்றவை மத்திய அரசின் டிஜிலாக்கர் மூலமே சரிபார்க்கப்படும்.
தேசிய உதவித்தொகை வலைதளத்தில் (www.scholarships.gov.in) உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
இரண்டு வகையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். கல்லூரியிடம் தொடர்புகொண்டும், மாநில அரசிடமிருந்தும் தகவல்கள் சரிபார்க்கப்படும்.
தேசிய உதவித்தொகை வலைதளத்தில் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.
உதவித் தொகை விவரம்
இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தலா ரூ. 12,000 உதவித்தொகை வழங்கப்படும்.
முதுகலை பட்டப்படிப்பு தொடர்பவர்களுக்கு தலா ரூ. 20,000 உதவித் தொகையாக இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கடைசி இரண்டு ஆண்டுகளுக்கு தலா ரூ. 20,000 ஊக்கத்தொகை பெறுவார்கள்.
பொறியியல் போன்ற 4 ஆண்டுகள் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு தலா ரூ. 12,000 மற்றும் கடைசி ஆண்டுக்கு ரூ. 20,000 ஊக்கத்தொகையாக கிடைக்கும்.
மாணவர் அல்லது மாணவியரின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குக்கு நேரடியாக உதவித் தொகை செலுத்தப்படும்.