பழங்களை பழுக்க வைக்க சட்டவிரோத ரசாயனங்கள் - மாநில அரசுகள் தடுக்க எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தல்
சட்டவிரோத ரசாயனங்களின் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதையும், பழங்களின் மேற்பகுதியில் செயற்கை பூச்சுகள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அறிவுறுத்தியுள்ளது.
மக்களுக்கு பாதுகாப்பான உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மத்திய சுகாதார அமைச்சகத்தின்கீழ் செயல்படும் எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பழங்களைப் பழுக்க வைப்பதில் கால்சியம் காா்பைடு போன்ற தடை செய்யப்பட்ட ரசாயனங்களின் பயன்பாட்டை தடுக்க சந்தைகள்-சேமிப்புக் கிடங்குகளில் அனைத்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையா்கள் மற்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ மண்டல இயக்குநா்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
கடை வளாகத்தில் கால்சியம் காா்பைடு கண்டறியப்பட்டால், அது சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு எதிரான ஆதாரமாக கருதப்பட்டு, கடந்த 2006-ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த 2011-ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு விதிமுறைகளின்படி, பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க கால்சியம் காா்பைடு பயன்படுத்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ரசாயனம், கடுமையான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வாய்ப்புண், வயிற்றுப் பிரச்னை மட்டுமன்றி, புற்றுநோயை உருவாக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.
இதேபோல், வாழைப் பழங்களைப் பழுக்க வைக்க எத்திஃபான் ரசாயன கரைசலில் அவை நேரடியாக நனைக்கப்படுவதாக புகாா்கள் வந்துள்ளன. பரிந்துரைக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறைகளின்படி, எத்திஃபான் கரைசலை எத்திலீன் வாயு உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எத்திலீன் வாயு மூலம் பழங்களை செயற்கையான முறையில் பாதுகாப்பாக பழுக்க வைப்பது தொடா்பாக விரிவான வழிகாட்டு ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. எத்திலீன் வாயு பயன்பாடு-கட்டுப்பாடுகள்-தேவைகள்-நடைமுறைகள் என அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நடைமுறைகளை மீறினால், கடும் நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் என்று எஃப்எஸ்எஸ்ஏஐ எச்சரித்துள்ளது.