ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம்: உயிர்த் தப்பிய பயணிகள்!
கொல்கத்தா வானில் பறந்த உளவாளி ட்ரோன்கள்?
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் வானில் ட்ரோன்கள் போன்ற சாதனங்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவின், ஹேஸ்டிங்க்ஸ், வித்யாசாகர் சேது மற்றும் மைதான் ஆகிய பகுதிகளின் வானில், கடந்த மே 19 ஆம் தேதியன்று இரவு ட்ரோன்களைப் போன்ற சாதனங்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது வெளிநாடுகளின் உளவாளி ட்ரோன்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் அம்மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுகுறித்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு, மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, அம்மாநில பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொல்கத்தா நகரத்தின் வானில் பறந்த ட்ரோன்களைப் பற்றிய தகவல் கிடைக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, அதன் பின்னனியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து, ஹேஸ்டிங்க்ஸ் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
“ இந்த ட்ரோன் போன்ற அமைப்புகள் சௌத் 24 பார்கனாஸ் மாவட்டத்தின் மஹேஸ்தலா பகுதியிலிருந்து கொல்கத்தா நோக்கி பறந்து வந்துள்ளது. பின்னர், ஹேஸ்டிங்க்ஸ் பகுதியில் பறந்த அவை, ஹூக்லி பாலத்தின் மீதும் வில்லியம் கோட்டை (ராணுவத்தின் கிழக்குப் படையின் தலைமையகம்) மீதும் பறந்துள்ளது. மேலும், அவை பார்க் சர்க்கஸ் பகுதியில் பறந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, கிழக்குப் பகுதிகளின் மீது பறந்த அவை பின்னர் மாயமாகியுள்ளன” என அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சிறப்பு அதிரடி படை மற்றும் கொல்கத்தா காவல் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: கன்னடத்தில் பேச மறுத்த எஸ்பிஐ மேலாளர்! முதல்வர் கண்டனம்!