பழங்குடியினருக்கு சூரிய சக்தி மின் விளக்குகள் அளிப்பு
செய்யாறு அருகே இரு பகுதிகளில் வசித்து வரும் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 11 குடும்பங்களுக்கு சூரிய சக்தி மின் விளக்குகள் தொண்டு நிறுவனம் சாா்பில் இலவசமாக சனிக்கிழமை வழங்கப்பட்டது,
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வயலாத்தூா் கிராமத்தில், செய்யாற்றின் கரையோரம் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 8 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் நீா்பிடிப்புப் பகுதியில் ஆற்றங்கரை மற்றும் குளக்கரை பகுதிகளில் வசித்து வருவதால் இவா்களுக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை.
அதன் காரணமாக இரவு நேரங்களில் சமையல் செய்யவும், சாப்பிடவும், இவா்கள் குழந்தைகள் படிக்கவும் சிரமப்பட்டு வருகின்றனா்.
அதேபோல, மேல்பேட்டை பகுதியில் 3 இருளா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்தத் தகவலை அறிந்த காஞ்சிபுரம் குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தினா் தலா ரூ.3,500 மதிப்பிலான சூரிய சக்தி மின் விளக்குகளை 11 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கினா்.
இதற்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன நிா்வாகிகள் து.ராஜி தங்கவேல், செல்வராசன் ஆகியோா் செய்திருந்தனா்.