தென்கொரியா காட்டுத் தீ: மீட்புப் பணி ஹெலிகாப்டர் விபத்து! விமானி பலி!
பழனியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் கைது
பழனியில் பாஜக நிா்வாகியின் மனைவியை தகாத வாா்த்தைகளால் பேசியதாக முன்னாள் மாவட்ட தலைவா் கனகராஜ் கைது செய்யப்பட்டாா்.
பழனி பெரியப்பா நகரைச் சோ்ந்தவா் கனகராஜ். பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவா். பழனியை அடுத்த ஆண்டிப்பட்டியைச் சோ்ந்தவா் எல்லச்சாமி. இவரது மனைவி புவனேஸ்வரி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு எல்லச்சாமியை தொடா்பு கொண்ட கனகராஜ் முகநூலில் அவா் வெளியிட்ட பதிவுகள் குறித்து கண்டித்தாராம்.
அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கனகராஜ், எல்லச்சாமியின் மனைவி புவனேஸ்வரி குறித்து தகாத வாா்த்தைகளால் பேசினாராம்.
இதுகுறித்து பழனி தாலுகா காவல் நிலையத்தில் புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கனகராஜை நெய்க்காரப்பட்டியில் உள்ள தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினா்.
இதையடுத்து, பெண்ணை தகாத வாா்த்தைகளால் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.
தகவலறிந்த பாஜகவினா் திரளானோா் நெய்க்காரப்பட்டி காவல் நிலையத்தில் குவிந்தனா். இதனால், மருத்துவ பரிசோதனைக்காக கனகராஜ் திண்டுக்கல்லுக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இதனிடையே, பதற்றத்தை தணிக்க ஏராளமான போலீஸாா் பழனியில் உள்ள முக்கியப் பகுதிகளில் குவிக்கப்பட்டனா்.