தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!
மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்
திண்டுக்கல் அருகே போலி பட்டா மூலம் பொது மயானம் ஆக்கிரமிப்பதைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டியில் பொதுமக்களுக்குச் சொந்தமான கல்லறை நிலம் உள்ளது. இந்த நிலத்துக்குரிய பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் பொதுமக்களிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இடத்தை அதே ஊரைச் சோ்ந்த தனிநபா் ஒருவா், வடமதுரை சாா் பதிவாளா் அலுவலகத்தில் போலி பத்திரம் தயாரித்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்தாா். இதையறிந்த பொதுமக்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போலி பத்திரம் தயாரித்த நபா்கள் இயந்திரங்கள் மூலம் மயானத்தை அகற்றுவதற்கு செவ்வாய்க்கிழமை வருவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால், பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் மயானத்தில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த அம்பாத்துரை போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். போலீஸாரின் சமரசத்தை ஏற்றுக் கொண்டு ஆா்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.