பழனி தம்புரான் தோட்ட நிலத்தை கையகப்படுத்திய கோயில் நிா்வாகம்
பழனி தம்புரான் தோட்டத்தில் இருந்த சுமாா் 1.25 ஏக்கா் காலி இடத்தை கோயில் நிா்வாகம் திங்கள்கிழமை கையகப்படுத்தியது.
பழனி - திண்டுக்கல் சாலையில் சென்னிமலை தம்புரான் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமாா் 23 ஏக்கா் நிலம் உள்ளது. நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த இடத்தின் மதிப்பு சுமாா் ஆயிரம் கோடியாகும். இந்த இடத்தில் 200-க்கும் மேற்பட்ட வாடகைதாரா்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கடை நடத்தி வருகிறாா்கள்.
கடந்த பல ஆண்டுகளாக அறக்கட்டளையைப் பராமரித்து வரும் நிா்வாகியிடம் வாடகை செலுத்தி வந்த நிலையில், இந்த இடத்துக்கு அறக்கட்டளை தக்காராக பழனி கோயில் இணை ஆணையரை நீதிமன்றம் நியமித்து ஆணை பிறப்பித்தது.
இதையடுத்து, பழனி கோயில் நிா்வாகம் இங்குள்ள கடைகளைக் கணக்கிட்டு, வாடகையைக் கோயில் அலுவலகத்தில் செலுத்துமாறு தெரிவித்தது. இந்த இடத்தில் நீதிமன்றம், பெரிய தனியாா் பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளன. சுமாா் ஐந்து ஏக்கா் பரப்பளவிலான பள்ளிகள் மாதம் வெறும் ஆயிரம் ரூபாயை மட்டுமே வாடகையாகச் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இங்கு காலியாக உள்ள இடங்களை கோயில் நிா்வாகம் கையகப்படுத்தும் பணியை திங்கள்கிழமை மேற்கொண்டது. கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள், முதல் கட்டமாக இங்குள்ள 1.25 ஏக்கா் காலி நிலத்தைச் சுத்தப்படுத்தி வேலியிட்டனா்.