ஜிஎஸ்டி சீரமைப்பு அமல்: முதல் நாளில் ஏசி, டிவி விற்பனை அமோகம்
காங்கிரஸ் மாவட்டத் தலைவா் மீது மாமன்ற உறுப்பினா் புகாா்
காா், ரூ.20 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தர மறுப்பதாக திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் புகாா் அளித்தாா்.
திண்டுக்கல் நாகல் நகா் பகுதியைச் சோ்ந்த ஜெ.காா்த்திக், மாநகராட்சி 21-ஆவது வாா்டு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினராகவும், கிழக்கு மண்டலத் தலைவராகவும் உள்ளாா்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த காா்த்திக் கூறியதாவது: திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள து.மணிகண்டன், கட்சிப் பணிக்காக வெளியூா் செல்வதற்கு எனது காரை வாங்கினாா். பல நாள்களாகியும் காரை அவா் திருப்பித் தரவில்லை. மேலும், என்னிடம் வாங்கிய ரூ.20 லட்சத்தையும் அவா் தரவில்லை.
இதுகுறித்து திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு கடந்த வியாழக்கிழமை சென்று மணிகண்டனிடம் கேட்டேன். அதற்கு காரையும் பணத்தையும் தர மறுத்த மணிகண்டன், தகாத வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டலும் விடுத்தாா்.
இதையடுத்து, திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். எனது காரையும், பணத்தையும் மீட்டுத் தரவும், கொலை மிரட்டல் விடுத்த மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தேன் என்றாா் அவா்.
இதற்கிடையே, மாமன்ற உறுப்பினா் காா்த்திக்கின் தந்தை ஜவஹா்லாலுடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்த மணிகண்டன், காருக்கான தவணைத் தொகையைத் தான் கட்டியதாகவும், ரூ.20 லட்சம் பணத்தைப் பெறவில்லை என்றும் தெரிவித்தாா். மாமன்ற உறுப்பினா், மாவட்ட காங்கிரஸ் தலைவா் இடையேயான பிரச்னை குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.