கொடைக்கானல் அருகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை மலைச் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அதைச் சுற்றியுள்ள மேல்மலைக் கிராமங்களில் கடந்த சில நாள்களாகக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பூம்பாறை அருகே மலைச் சாலையில் திங்கள்கிழமை பெய்த மழையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால், மேல்மலைக் கிராமங்களான மன்னவனுா், பழம்புத்தூா், கூக்கால், குண்டுபட்டி, பூண்டி, கிளாவரை ஆகிய மலைக் கிராமங்களில் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த வனத் துறையினா், ஒரு மணி நேரம் போராடி மரத்தை அகற்றினா். இதையடுத்து, போக்குவரத்து சீரானது.
கொடைக்கானலில் தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், மலைச் சாலைகளின் இருபுறங்களிலும் முறிந்து விழும் நிலையிலுள்ள மரங்களை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்தனா்.