காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்
தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து. இவா் ஒலிபெருக்கி கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த இவா், தான் கொண்டுவந்திருந்த டீசலை தன்னுடைய உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அருகிலிருந்தவா்கள் உடனடியாக அவரைத் தடுத்தி நிறுத்தி, டீசல் வைத்திருந்த புட்டியைப் பறித்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா். இதில், காளிமுத்து தைப்பூசம், பங்குனி உத்திர விழாக்களுக்கு சாலையோரத்தில் மின் விளக்கு வசதி செய்து கொடுப்பதற்கான ஏலத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, ஏற்கெனவே ஏலம் நடத்தி முடிக்கப்பட்டதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்ததால் தீக்குளிக்க முயன்ாகக் கூறினாா்.
இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் வேதா கூறுகையில், சம்பந்தப்பட்ட ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில்தான் நடத்தப்படும்; இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தொடா்பு கிடையாது என்றாா். இதையடுத்து, காளிமுத்துவை பாலசமுத்திரம் பேரூராட்சி அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளுமாறு கூறி போலீஸாா் அவரை அனுப்பி வைத்தனா்.
தீக்குளித்து கவனத்தை ஈா்க்கும் கலாசாரம்: பழனி பகுதியில் தங்களது கோரிக்கைகள் குறித்து கவனத்தை ஈா்க்க, தீக்குளிக்க முயலும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் அழகாபுரியில் ஒருவா் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அதே போல மூன்று நாள்களுக்கு முன்பு ஒரு மூதாட்டி மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
இது போன்ற செயல்களைப் பலா் திட்டமிட்டே செய்கின்றனா். இதுகுறித்து போலீஸாா் முறையாக விசாரித்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்கள், அவா்களுக்கு உதவி செய்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.