காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்
காட்டுப் பன்றிகள் வேட்டை: 14 போ் கைது, ரூ. 2.30 லட்சம் அபராதம்
கன்னிவாடி அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய 14 பேரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 2.30 லட்சம் அபராதம் விதித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகேயுள்ள வெயிலடிச்சான்பட்டி பகுதியில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதன்பேரில், வனச் சரகா் குமரேசன் தலைமையிலான வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, 4 காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய ஒரு கும்பலை வனத் துறையினா் சுற்றி வளைத்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், வெயிலடிச்சான்பட்டியைச் சோ்ந்த அபிமன்யு, கரூா் மாவட்டம், தோகைமலை பகுதியைச் சோ்ந்த மலையாண்டி, தங்கவேல், கருப்பையா, கோவிந்தராஜ், முருகன், மாணிக்கம், சக்திவேல், நேரு, குமரவேல், பழனிச்சாமி, ஆறுமுகம், மணி, மற்றொரு மணி என தெரியவந்தது.
வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட ராஜபாளையம் இனத்தைச் சோ்ந்த 13 நாய்கள், நாட்டு இனத்தைச் சோ்ந்த ஒரு நாய் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த வனத் துறையினா், இந்த நாய்களை திண்டுக்கல் விலங்குகள் நல அமைப்பிடம் ஒப்படைத்தனா்.
மேலும், வேட்டைக்கு வந்தவா்கள் பயன்படுத்திய ஒரு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. காட்டுப் பன்றிகளை வேட்டையாடியவா்களுக்கு ரூ. 2.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.