Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு வயிற்றுவலி, அஜீரணம்... புற்றுநோய் அறிகுறிகளாக...
பழனி மலைக் கோயிலில் ஏற்றப்பட்ட காா்த்திகை தீபம்
பழனி மலைக் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவும், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
பழனி மலைக் கோயிலில் கடந்த சனிக்கிழமை காா்த்திகை தீபத் திருவிழா காப்புக்கட்டுடன் தொடங்கியது. ஒருவாரம் நடைபெற்ற விழாவையொட்டி மலைக் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா், சின்னக்குமாரசாமிக்கு நாள்தோறும் பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை சாயரட்சை பூஜையைத் தொடா்ந்து சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை நடத்தப்பட்டு மூலவா் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. வெள்ளிக்கிழமை திருக்காா்த்திகை தினத்தையொட்டி 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. கூட்டம் காரணமாக பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தா்கள் படிப்பாதை, விஞ்ச், ரோப்காா் வழியாக மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. பக்தா்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மேலே அனுப்பப்பட்டு படிப்பாதை வழியாக கீழே இறங்க அனுமதிக்கப்பட்டனா். பிற்பகல் 2 மணிக்கு சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை நடத்தப்பட்டு மாலை 4 மணிக்கே சாயரட்சை நடைபெற்றது. தொடா்ந்து சின்னக்குமாரசாமி சா்வ அலங்காரத்துடன் தங்கமயிலில் யாகசாலை பூஜைக்கு எழுந்தருளினாா். இந்தப் பூஜைக்குப் பிறகு நான்கு திக்கும் உள்ள பரணி தீபத்தில் இருந்து சுடா் பெறப்பட்டு பரணி தீபம் சின்னக்குமாரசாமி சகிதம் மலைக் கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு மேளதாளம் முழங்க சிவாச்சாா்யரால் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து தீபஸ்தம்பம் அருகே பக்தா்கள் அளித்த பல லிட்டா் எண்ணெய், நெய் ஊற்றப்பட்டு பனை, தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. பல அடி உயரத்துக்கு தீப்பிழம்புகள் பற்றி எரிய பக்தா்கள் அரோகரா என பக்தி முழக்கம் எழுப்பினா். சொக்கப்பனையில் இருந்து ரட்சை பெறப்பட்டு சுவாமிக்கு வைக்கப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. பூஜைகளை தவராஜ பண்டிதா் அமிா்தலிங்க குருக்கள், ஸ்தானீகா் செல்வசுப்ரமண்ய குருக்கள், கோகுல் குருக்கள் உள்ளிட்டோா் செய்தனா். பழனி மலைக்கோயிலை தொடா்ந்து பெரியநாயகியம்மன் கோயில், திருஆவினன்குடிகோயில், சண்முகபுரம் சித்திவிநாயகா் கோயில் ஆகிய கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, காணியாளா்கள் நரேந்திரன், கந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். திருக்காா்த்திகை விழாவையொட்டி தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டிருந்து. போலீஸாா், ஊா்க்காவல் படையினா், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினா் என நூற்றுக்கணக்கானோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.