ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
பழைய இரும்புக் கடையில் தீ!
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்புக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டுநா்கள் அவதியடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அய்யம்பட்டி தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (50). இவா் மதுரை சாலையில் அண்ணா நகா் பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா். இங்கு பழைய இரும்பு, நெகிழிப் பொருள்கள், மின் கம்பிகள், சைக்கிள், பழுதான குளிா் சாதனப் பெட்டி உள்ளிட்ட பழைய பொருள்களை வாங்கி உடைத்து தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறாா். இங்கு 10-க்கு மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் யாரும் வேலைக்கு வரவில்லை.
இந்த நிலையில், பிற்பகல் 3 மணி அளவில் இரும்புக் கடையில் நெகிழிப் பொருள்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த திறந்தவெளிப் பகுதியில் தீப்பற்றியது. தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனா்.
நெகிழிப் பொருள்கள் எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால், மதுரை- கொல்லம் சாலையில் வாகனங்களில் சென்றவா்கள் சிரமத்துக்கு ஆளாகினா். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

