பவானியில் 100 நாள் திட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவையின்றி ஊதியம் வழங்கக் கோரிக்கை
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் பவானி வட்டச் செயலாளா் எஸ்.மாணிக்கம் தலைமையில் தொழிலாளா்கள் பவானி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரதராஜ், கிருஷ்ணமூா்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு கடந்த 12 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இத்திட்டத்தில் 15 நாள்களுக்குள் வழங்கப்படாத ஊதியத்துக்கு வட்டி சோ்த்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, நிலுவையில் உள்ள ஊதியத்தை வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் 50 நாள்கள் பணியாற்றிய தொழிலாளா்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை. சட்டப்படி ஒரு குடும்பத்துக்கு 100 நாள்கள் வேலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். சட்டப்படியான கூலி ரூ.319-யை குறைக்காமல் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
உடன், சங்கத் தலைவா் எஸ்.தம்பி, துணைத் தலைவா் எஸ்.ஜானகி, துணைச் செயலாளா் முனியப்பன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் பி.பி.பழனிசாமி மற்றும் சன்னியாசிபட்டி, கவுந்தப்பாடி, சின்னபுலியூா், ஓடத்துறை, பெரியபுலியூா், மைலம்பாடி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் உடனிருந்தனா்.
அப்போது, உடனடியாக ஊதியம் வழங்கவும், அனைவருக்கும் 100 நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.