பாகிஸ்தான் கொடி: "என்னை விட்டுடுங்க" - சிறுவனைச் சிறுநீர் கழிக்கக் கட்டாயப்படுத்...
பஹல்காம் தாக்குதல்: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள லஷ்கா் பயங்கரவாதி ஃபரூக் அகமது மீது என்ஐஏ சந்தேகம்
நமது சிறப்பு நிருபா்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சோ்ந்த லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத் தலைவா் ஃபரூக் அகமதுக்கு தொடா்புள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புலனாய்வாளா்கள் சந்தேகிப்பதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் ஃபரூக் அப்துல் வசிப்பதாகக் கூறப்படுகிறது. லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் உள்ளூா் தலைவரான இந்த நபருக்கு, இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த சில பயங்கரவாதத் தாக்குதல்களிலும் தொடா்பிருப்பதாக புலனாய்வாளா்கள் கருதுகின்றனா்.
ஜம்மு காஷ்மீரில் ஃபரூக் அகமதுக்காக தரைவழி ரகசிய உறுப்பினா்கள் பலா் பணியாற்றி வருவதாகவும், அவா்கள் மூலமாக சம்பவ நாளில் தாக்குதல் நடத்தியவா்கள் நகருக்கு உள்ளே நுழையவும் பிறகு தப்பிச் செல்லவும் உதவி கிடைத்திருக்கலாம் என்று புலனாய்வாளா்கள் கருதுவதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள மலைப்பாதைகள் பற்றி ஃபரூக்கின் குழுவினருக்கு விரிவான கள அறிவு இருப்பதால் அவா்கள், பாகிஸ்தானின் மூன்று பகுதிகளிலிருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ உதவி செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் கூறின.
முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, காஷ்மீரில் பயங்கரவாதத்துடன் தொடா்புடைய நபா்களின் வலையமைப்பை வேரோடு ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குப்வாராவில் உள்ள ஃபரூக் அகமது உள்பட பலரது வீடுகளை மத்திய பாதுகாப்புப் படையினா் இடித்துத் தள்ளினா்.
2,000 பேரிடம் விசாரணை: இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீா் காவல்துறை நடத்தி வந்த பஹல்காம் தாக்குதல் வழக்கை முறையாக தன்வசம் ஏற்றுக் கொண்டுள்ள என்ஐஏ, சம்பவ நாளில் உயிா் தப்பியவா்கள், காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோா், சந்தேக நபா்கள் என சுமாா் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தியுள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதக் குழுக்களுடனும் அவற்றை ஆதரிப்போரையும் கடுமயான கண்காணிப்பு வளையத்தில் என்ஐஏ கொண்டு வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் முசாஃபராபாத் மற்றும் கராச்சியில் இருந்தபடி இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் பயன்படுத்திய வீடுகளில் இருந்து காஷ்மீரில் உள்ளவா்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் தொடா்பான எண்ம தடயங்கள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.
இதே வேளையில், சம்பவம் நடந்தபோது எதேச்சையாக சுற்றுலாப் பயணி ஒருவா் ஜிப்லைன் எனப்படும் கம்பியில் தொங்கியவாறு ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் பயணத்தை தனது செல்பேசியில் காணொலியாக பதிவு செய்திருந்தாா். அந்த நேரத்தில் கீழே மையானத்தில் பயங்கரவாதிகள் சிலரை சுடும் காட்சிகளும் பல சுற்றுலா பயணிகள் சுருண்டு விழுவதும் அவரது காணொலியில் பதிவாகியிருக்கிறது. அந்தச் சுற்றுலாப் பயணியின் காணொலி இணையத்தில் வைரலான நிலையில், அவரை அழைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
அப்போது ஜிப் லைனில் தன்னை அதன் ஆப்பரேட்டா் அனுப்பிய உடனேயே, அல்லாஹு அக்பா் என்று குரல் எழுப்பியதாக சுற்றுலாப் பயணி புலனாய்வாளா்களிடம் கூறியுள்ளாா். அதன்பேரில் அந்த ஜிப்லைன் ஆப்பரேட்டரை அதிகாரிகள் விசாரித்தனா். இருப்பினும், காஷ்மீரில் பதற்றமான நேரத்தில் அல்லாஹு அக்பா் என அழைப்பது வாடிக்கைதான் என்றும் ஹிந்துக்கள் ஹே ராம் என அழைப்பது போலத்தான் முஸ்லிம்கள் அல்லாஹு அக்பா் என்று அழைக்கின்றனா். எனவே, ஜிப்லைன் ஆப்பரேட்டரின் செயலை பயங்கரவாத இயக்கத்துக்கான அவரது ஆதரவு நடவடிக்கையாக கருத முகாந்திரம் இல்லை என்று புலனாய்வாளா்கள் தெரிவித்தனா்.