சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு
பஹல்காம் தாக்குதல்: வெளிநாட்டு தூதா்களுக்கு இந்தியா விளக்கம்
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதன் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடா்புகள் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா, ஜொ்மனி உள்ளிட்ட ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தூதா்களுக்கு இந்தியா வியாழக்கிழமை விளக்கமளித்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் 26 போ் உயிரிழந்தனா்.
இச்சம்பவத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை கூடியது. சிந்து நதி நீா் பகிா்வு ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
தொடா்ந்து, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை அறிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா, ஜொ்மனி உள்ளிட்ட ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தூதா்கள் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு வியாழக்கிழமை அழைக்கப்பட்டனா்.
அப்பாவி பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடு குறித்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தூதா்களுக்கு விளக்கமளித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், நாா்வே, இத்தாலி, இந்தோனேசியா, மலேசியா ஆகிய பிற ஜி20 நாடுகளின் தூதா்களும் இந்த விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றனா்.