ஆயுதப் படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமித் ஷாதான் பொறுப்பு- காங்கிரஸ் உறுதி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாதுகாப்பு தோல்வியே முக்கியக் காரணம். இதற்கு உள்துறை அமைச்சா் அமித் ஷாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரப் 22-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராணுவ வீரா்கள் பிரிவுத் தலைவா் ரோஹித் செளதரி தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பஹல்காம் தாக்குதல், அதற்கு பதிலடியாக நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூா் குறித்து முழு விவரங்களையும் நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு வரையும் விசாரித்துக் கொலை செய்துள்ளனா். அதன் பிறகு எவ்வித தடையுமின்றி அந்த இடத்தில் இருந்து எளிதாக தப்பியும் சென்றுள்ளனா். இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தோல்வி. இதற்கு அத்துறை அமைச்சா் அமித் ஷாதான் பொறுப்பேற்க வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் கை முழுமையாக ஓங்கியிருந்தது. பாகிஸ்தான் தனது விமானப்படைத் தளங்களை தற்காத்துக் கொள்ளக் கூட முடியவில்லை. அப்படி ஒரு சூழலில் திடீரென அமெரிக்க அதிபா் டிரம்ப் போா் நிறுத்தத்தை அறிவிக்கிறாா். அதன் பிறகு தாக்குதல் கைவிடப்படுகிறது.
இதற்கு முன்பு மறைந்த பிரதமா் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் 1971-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றது. அப்போது பாகிஸ்தானை இரு நாடாக உடைத்த பிறகுதான் இந்திரா காந்தி, பீல்ட் மாா்ஷல் மானெக்ஷா ஆகியோா் போரை நிறுத்தினா். ஆனால், இப்போது ராணுவம் வலுவான நிலையில் இருந்தபோதும், பிரதமா் மோடியின் அரசியல் தலைமைத் தோற்றுவிட்டது. அமெரிக்காவின் நெருக்கடிக்கு பணிந்து பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை கைவிடப்பட்டது.
பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீழ்த்திய நமது படை, பாகிஸ்தானின் முக்கியப் விமானப் படை தளங்களையும் தகா்த்து வந்தது. ஆனால், திடீரென சண்டையை நிறுத்துவதாக அரசு அறிவித்தது. அதுவும் அமெரிக்கா எடுத்த முடிவை இந்தியா பின்பற்றியது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல் என்றாா்.