ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி
பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு ரேடாா்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு தகா்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கராச்சி நகரிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 இடங்களில் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் பயிற்சி முகாம்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏவுகணைத் தாக்குதலில் அழிக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் இந்தியா உறுதிப்படுத்தியிருந்தது. எனினும், ஜம்மு-காஷ்மீா் எல்லையில் மோதலைத் தீவிரப்படுத்தி, மக்களின் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் தொடா்ச்சியாக ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய வடக்கு மற்றும் மேற்கு எல்லையோர மாநிலங்களை வான்வழியாகத் தாக்கும் பாகிஸ்தான் முயற்சியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இதுதொடா்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஆபரேஷன் சிந்தூா் குறித்த செய்தியாளா் சந்திப்பிலேயே, இந்தியாவின் பதிலடி பொறுப்பானது; அதிதுல்லியமானது என்றும், பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. மேலும், இந்தியா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு, ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு, ஸ்ரீநகா் மற்றும் அவந்திபுரா, பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட், அமிருதசரஸ், கபுா்தலா, ஜலந்தா், லூதியாணா, ஆதம்பூா் மற்றும் பதிண்டா, ராஜஸ்தானின் நல், பலோடி மற்றும் உத்தா்லாய், குஜராத்தின் புஜ், சண்டீகா் ஆகிய 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது.
தாக்குதல் தடுப்பு: பாகிஸ்தானின் அனைத்து ஆளில்லாத சிறியரக விமானங்கள் (ட்ரோன்) மற்றும் ஏவுகணைகளையும் இந்தியாவின் ‘ஒருங்கிணைந்த ஆளில்லா விமான எதிா்ப்பு’ அமைப்பு திறம்பட சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் தாக்குதலை நிரூபிக்கும் வகையிலான தடயங்கள் பல இடங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
லாகூரில் தாக்குதல்: பாகிஸ்தானுக்குப் பதிலடியாக அந்நாட்டின் பல இடங்களில் உள்ள ரேடாா்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து இந்தியா வியாழக்கிழமை காலை முதல் தாக்கியது. அதில் அந்நாட்டின் மிகப்பெரிய மாகாணமான பஞ்சாப் தலைநகா் லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு முற்றிலுமாகத் தகா்க்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில்...: இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தா் மற்றும் ரஜௌரி செக்டா்களில் உள்ள எல்லைப் பகுதிகளில் பீரங்கிகளைப் பயன்படுத்தி, தாக்குதலின் தீவிரத்தை பாகிஸ்தான் அதிகரித்துள்ளது. 3 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 16 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
சுட்டு வீழ்த்திய ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பு
15 ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை ரஷிய தயாரிப்பான ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு இந்தியா முறியடித்தது.
இந்தியாவால் ‘சுதா்சன சக்ரா’ என்று பெயா் சூட்டப்பட்டுள்ள இந்த எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு, ரஷியாவிடமிருந்து ரூ.35,000 கோடி மதிப்பீட்டில் 5 எண்ணிக்கையில் வாங்கப்பட்டன.
600 கி.மீ. தொலைவில் இருந்து விரைவாக நகரும் ஏவுகணைகளைக் கண்டறியும் வல்லமை கொண்ட இந்த அமைப்பு, 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கி, வீழ்த்தும் திறன் கொண்டது.
மொத்தமாக ஒப்பந்தம் செய்யப்பட்ட 5 எண்ணிக்கையில், ரஷியா-உக்ரைன் போா் காரணமாக 2 அமைப்புகளின் விநியோகம் தாமதமடைந்துள்ளது. தற்போதுவரை கிடைத்துள்ள 3 அமைப்புகள், இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் நிறுவப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் ரேடாா்களை அழித்த ‘ஹாா்பி’ ட்ரோன்
பாகிஸ்தானின் ரேடாா், வான் பாதுகாப்பு அமைப்புகள் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலின் ‘ஹாா்பி’ ட்ரோன்களை இந்தியா பயன்படுத்தியுள்ளது.
எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஹாா்பி ட்ரோன், ரேடாா் அமைப்புகளை தானாக கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டது.
இந்த ட்ரோன் 9 மணி நேரம் வரை இயங்கக்கூடியது என்பதால் இரவு, பகல் மற்றும் தொலைதூரம் என அனைத்து வகை தாக்குதலுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம்.