பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும் அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அல்-காதிர் அறக்கட்டளை சார்பில் 190 மில்லியன் பவுண்ட் முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 13 உள்பட பல காரணங்களுக்காக பல்வேறு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஜாவேத் ராணா இன்று வழங்கினார்.
இதையும் படிக்க | ஹமாஸுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்
சிறைத் தண்டனை மட்டுமின்றி இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் ரூபாயில் 1 மில்லியன் அபராதமும் அவரது மனைவிக்கு அரை மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைக் கட்டத் தவறினால் இம்ரான் கானுக்கு 6 மாதங்களும் அவரது மனைவிக்கு 3 மாதங்களும் தண்டனைக் காலம் நீட்டிக்கப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இம்ரான் கானின் அல்-காதர் பல்கலையின் நிலத்தை கையகப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இம்ரான் கான் ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில் அவரது மனைவி புஷ்ரா இன்று நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டார்.
”இன்றைய தீர்ப்பு நீதித் துறையின் மீது ஏற்பட்ட களங்கமாகும். எனக்கு எந்த நிவாரணமும் தேவையில்லை. நான் அனைத்து வழக்குகளையும் எதிர்கொள்வேன். இந்த விஷயங்களை ஒரு சர்வாதிகாரி செய்து கொண்டிருக்கிறார்” என்று இம்ரான் கான் தெரிவித்தார்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் தோல்வியடைந்த இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை இழக்க நேர்ந்தது. அதன் பின்னர், எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃப் பொறுப்பேற்றார்.
பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் இம்ரான் கான் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையும் படிக்க | பெருமுதலாளிகளின் பிடிக்குள் செல்லும் அமெரிக்கா! -அதிபா் ஜோ பைடன்
அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார். 2023 ஆகஸ்ட் மாதம் முதல் அவர் சிறையில் இருக்கிறார்.
இதனைத் தொடந்து, அரசு கருவூல ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் இம்ரான் கானை குற்றவாளி என அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனால் இம்ரான்கான் வகித்த எம்.பி. பதவியும் பறிபோனது.
இந்த வழக்குகளுக்கு எதிராக இம்ரான் கான் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இம்ரான் கான் மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டதால் நாட்டின் அரசியலில் நிலையற்றத் தன்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அவர்களின் ஆதரவாளார்களால் கலவரங்கள் நடத்தப்பட்டன. இதனை சரிசெய்ய பாகிஸ்தான் அரசுக்கும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று வெளியான தீர்ப்பு மேலும் பதற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி அரசுடன் நடத்திய மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளில் தனது கோரிக்கைகளை அவர்கள் அரசாங்கத்திடம் எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.