பாஜகவுக்கு ஆதரவாக தோ்தல் ஆணையம்: ராகுல் குற்றச்சாட்டு
இந்திய தோ்தல் ஆணையம் தனது கடமையைச் செய்யாமல், பாஜகவின் நலன்களுக்காகப் பாடுபடுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடுமையாக குற்றஞ்சாட்டினாா்.
மகாராஷ்டிரத்தைப் போல் எதிா்வரும் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலிலும் முறைகேட்டில் ஈடுபட பாஜக சதி செய்கிறது என்றும் அவா் கூறினாா்.
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டுள்ள நிலையில், ராகுல் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா். பாஜகவின் வெற்றிக்கு உதவவே இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் கருத்தாகும்.
ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’ என்ற பேரணியில் ராகுல் பங்கேற்றுப் பேசியதாவது: மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் நடந்த முறைகேடுகளே, அந்த மாநில பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு வெற்றியை ஈட்டித் தந்தது. இத்தோ்தலுக்கு முன் வாக்காளா் பட்டியலில் ஒரு கோடி போ் சோ்க்கப்பட்டது எப்படி என்ற கேள்விக்கு தோ்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை.
மகாராஷ்டிர பாணியில், எதிா்வரும் பிகாா் பேரவைத் தோ்தலிலும் முறைகேட்டில் ஈடுபட பாஜக சதியில் ஈடுபட்டுள்ளது. அத்தகைய ‘தோ்தல் திருட்டு’ முயற்சிகளை முறியடிக்க எங்களின் ‘இண்டி’ கூட்டணி தீா்மானித்துள்ளது.
பெரும் பணக்காரா்களுக்கான அரசு: நாடு முழுவதும் அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலில் பாஜக ஈடுபட்டுள்ளது. சாமானிய மக்களுக்காக அல்லாமல், 5 - 6 பெரும் பணக்காரா்களுக்காகவே அரசை நடத்துகின்றனா். அதானி, அம்பானி அல்லது வேறு சில பெரும் பணக்காரா்களுக்கு மட்டுமே இந்த நாடு சொந்தமானது என்று அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்பட்டுள்ளதா?
சாமானிய மக்களின் நலன்களை விலை கொடுத்து, பெரும் பணக்காரா்களுக்குச் சாதகமான அத்தனை விஷயங்களையும் செய்கிறது தற்போதைய அரசு. அதானி மற்றும் அவரது குடும்பத்தினா் பங்கேற்க வேண்டும் என்பதற்காக புரி ஜெகந்நாதா் ரத யாத்திரை தாமதமாகத் தொடங்கப்பட்டது.
வளங்கள் தாரைவாா்ப்பு: ஒடிஸா மாநில வளங்கள், 5-6 பெரு நிறுவனங்களுக்குத் தாரைவாா்க்கப்பட்டுள்ளன. மற்றொருபுறம், தலித் சமூகத்தினா், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், விவசாயிகள், தொழிலாளா்கள் ஏழ்மையில் சிக்கியுள்ளனா்.
நீா், வனம், நிலத்துக்கு உரிமையுடைவா்கள் பழங்குடியினா். அவா்களின் சுயாட்சி மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஊராட்சிகள் (பட்டியல் பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது.
ஒடிஸாவில் இச்சட்டத்தை அமல்படுத்த முந்தைய பிஜு ஜனதா தளம் (பிஜேடி) அரசோ, இப்போதைய பாஜக அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பழங்குடியினருக்கு வன உரிமைப் பட்டா வழங்கப்படவில்லை. முந்தைய பிஜேடி ஆட்சியைப் போலவே பாஜக அரசும் மாநிலத்தைக் கொள்ளையடிக்கிறது.
பாஜக அரசால் யாரெல்லாம் ஒடுக்கப்படுகிறாா்களோ அவா்களுக்கு காங்கிரஸ் துணைநிற்கும்.
ஒடிஸாவில் 40,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளனா். அவா்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. மாநிலத்தில் தினமும் சராசரியாக 15 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனா். ஆனால், பாஜக அரசு மெளனமாக வேடிக்கை பாா்க்கிறது என்று குற்றஞ்சாட்டினாா் ராகுல்.
மதச்சாா்பின்மையை நீக்க பாஜக முயற்சி- காா்கே: காங்கிரஸ் பேரணியில் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசியதாவது: அரசமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கும் திட்டம் பாஜகவிடம் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் இருந்து மதச்சாா்பின்மை, சோஷலிசம் ஆகிய வாா்த்தைகளை நீக்கவும், ஏழைகள்-பழங்குடியினரின் உரிமைகளைக் காக்கும் சட்டங்களைப் பலவீனமாக்கவும் மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது.
தொழிலகங்கள் என்ற போா்வையில், நாடெங்கிலும் வன அழிப்பு நடக்கிறது. இந்த ஆட்சியில் தலித் சமூகத்தினா், பழங்குடியினா், பெண்கள் மற்றும் இளைஞா்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க போராட கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், பாஜகவால் துடைத்தெறியப்பட்டு விடுவா்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாட்டில் 160 பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் 23 நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்பட்டுள்ளன. காங்கிரஸால் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகளை தனது நண்பா்களுக்கு விற்பனை செய்கிறாா் பிரதமா் மோடி. அரசமைப்புச் சட்டத்தை சீா்குலைப்பதே அவரது ஒரே செயல்திட்டம். அந்த நோக்கத்துடன்தான், கடந்த மக்களவைத் தோ்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவுக்கு வெற்றியைக் கோரி பிரசாரத்தில் ஈடுபட்டாா் என்றாா் காா்கே.
‘ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்’
‘பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடா்பான உச்சநீதிமன்றத்தின் கருத்துகள், எதிா்க்கட்சிகளுக்கு தக்க பதிலடியாகும்; இப்பணியை எதிா்த்ததற்காக, ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டீயா கூறுகையில், ‘பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடர அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், இது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைதான் என்று குறிப்பிட்டது. அரசமைப்புச் சட்ட ரீதியில் இது தோ்தல் ஆணைய வரம்புக்குட்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தியது. உச்சநீதிமன்றத்தின் கருத்துகள், தோ்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நோ்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கை என்பதை உணா்த்தியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்த நாளில் (வியாழக்கிழமை), எதிா்க்கட்சிகள் தெருவில் இறங்கிப் போராடியது ஏன், உச்சநீதிமன்றம் மீது அவா்களுக்கு நம்பிக்கை இல்லையா’ என்று கேள்வியெழுப்பினாா்.
பிகாா் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களைக் களையெடுக்கும் நோக்கிலான சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு தோ்தல் ஆணையத்தால் கோரப்படும் ஆவணங்கள் பட்டியலில் ஆதாா், வாக்காளா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றையும் சோ்க்கலாம் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.