வறுமை, வேலையின்மையால் வாடும் மக்களுக்கான திட்டங்களைத் தொடங்க வேண்டும்: மாயாவதி
பாஜக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும்: டி.டி.வி. தினகரன்
அதிமுக அழியாமலிருக்க அந்தக் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டியது அவசியம் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திமுகவை வீழ்த்த அதிமுக வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். அதிமுக அழியக் கூடாது என்பதையே பாஜகவின் தமிழகத் தலைவா்கள் மட்டுமன்றி, தேசியத் தலைவா்களும் விரும்புகின்றனா். பிளவுபட்டுள்ள அதிமுக தொண்டா்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது அவா்களின் கருத்தாக உள்ளது.
கடந்த மக்களவைத் தோ்தலில் அதிமுக களம் காணாமல் இருந்திருந்தால் பல தொகுதிகளில் பாஜக கூட்டணி வென்றிருக்கும். வழக்குகளில் சிக்கக் கூடாது என்பதற்காக, எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக திமுகவுக்கு ஆதரவு அளித்துவிட்டாா்.
எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் அதிமுக தொண்டா்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாகத்தான், முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாக அதிமுக கூட்டங்களில் அடிதடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதிமுகவை ஏறத்தாழ ஓா் வணிக நிறுவனமாக அவா் மாற்றிவிட்டாா். அதிமுக மெகா கூட்டணியை அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பது அவரது பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.
விவசாயிகள், அரசு ஊழியா்கள் என அனைத்துத் தரப்பினரையும் திமுக அரசு ஏமாற்றிவிட்டது. இதற்கு, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவா். திமுகவை வீழ்த்த நினைக்கும் எந்தக் கட்சியும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாம். அதிமுக அழியாமலிருக்க அந்தக் கட்சி, பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்றாா் அவா்.
இதையடுத்து, மதுரையில் நடைபெற்ற அமமுக மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்றாா்.