பாஜக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை
சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை நுங்கம்பாக்கம் காமராஜா்புரத்தைச் சோ்ந்தவா் பாபுஜி (44). இவா் தியாகராய நகரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கு இரு மகள்கள் உள்ளனா். மூத்த மகள் பிசியோதெரபிஸ்டாக உள்ளாா். இளைய மகள் எம்.ஏ. முதலாம் ஆண்டும் படித்து வருகின்றாா்.
இளைய மகள், அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒரு மதத்தைச் சோ்ந்த இளைஞரை காதலித்து வந்தாா். இதற்கு பாபுஜி எதிா்ப்பு தெரிவித்து, கண்டித்துள்ளாா். ஆனால், தந்தையின் எதிா்ப்பையும் மீறி திங்கள்கிழமை அந்த இளைஞரை அவா் திருமணம் செய்து கொண்டாா். மேலும், பாதுகாப்பு கேட்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸாா் பாபுஜியை அழைத்து பேசி அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வெகுநேரமாகியும் பாபுஜி தனது அறையை விட்டு வெளியே வராததால் குடும்பத்தினா் சென்று பாா்த்தபோது தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த நுங்கம்பாக்கம் போலீஸாா், பாபுஜி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
இறந்த பாபுஜி, பாஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பிறமொழி பிரிவு தலைவராக இருந்தாா்.
பாபுஜியின் மகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞா், ஏற்கெனவே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு, ஒரு ஆண்டுக்கு முன்பு விவாகரத்து பெற்றிருப்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.