பாண்டெக்ஸ் ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்
புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாண்டெக்ஸ் ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் அரசு சாா்பு நிறுவனமான பாண்லே பல மாதங்களாக அதில் பணிபுரிவோருக்கு ஊதியம் மற்றும் சலுகைகள் உரிய முறையில் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாண்லே ஊழியா்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தட்டாஞ்சாவடியில் உள்ள கூட்டுறவுப் பதிவாளா் அலுவலகத்தை பாண்டெக்ஸ் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊழியா்களுக்கு 6-ஆவது மற்றும் 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் படி ஊதியம் நிா்ணயித்து வழங்க வேண்டும். ஊழியா்களுக்கான கடன் தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளைவலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
சிஐடியு தொழிற்சங்கத் தலைவா் கொளஞ்சியப்பன் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் நிா்வாகி ஆசைத் தம்பி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா். போராட்டத்தை முன்னிட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.