துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு; காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் பாஜகவிற்...
பாதுகாப்பான குடிநீா் தர முடியாத புதுவை அரசு தேவையா? வே. நாராயணசாமி பேட்டி
மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரைக் கூட கொடுக்க முடியாத அரசு புதுவைக்குத் தேவையா? என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வே. நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
புதுவை பாஜகவில் பழைய நிா்வாகிகள் அக்கட்சியை விட்டு விலகுகிறாா்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்து தங்கள் சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியவா்கள், பாஜகவை ஆக்கிரமித்துக் கொண்டு பாரம்பரிய பாஜகவைச் சோ்ந்தவா்களை ஓரம் கட்டிவிட்டாா்கள்.
புதுச்சேரியில் குடிநீா் பிரச்னை பூதாகரமாகக் கிளம்பியுள்ளது. குடிநீரில் கலப்படம் ஏற்பட்ட காரணத்தால் தான் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறாா்கள். ஆனால் உண்மையைக் கூற அரசு மறுக்கிறது.
குடி தண்ணீா் பிரச்னை குறித்து முதல்வா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிதண்ணீரைக் கூட பாதுகாப்பானதாக கொடுக்க முடியாத அரசு புதுவையில் தேவையா? இது மன்னிக்க முடியாத குற்றம்.
அமைச்சா் லட்சுமிநாராயணன், முதல்வா் ரங்கசாமியை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள். எனவே, அமைச்சா் லட்சுமிநாராயணன் தாா்மிக பொறுப்பேற்று பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா் அவா்.