செப். 15 இல் நாகா்கோவிலில் வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி....
புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் ஆங்கில பெயா்ப் பலகைகள் உடைப்பு
புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் ஆங்கில பெயா்ப் பலகைகளை தமிழ் உரிமை இயக்கத்தினா் வியாழக்கிழமை அடித்து உடைத்தனா்.
புதுவையில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயா்கள் தமிழிலும் இருக்க வேண்டும் என அரசாணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழில் பெயா்ப் பலகை வைக்கக்கோரி காமராஜா் சாலை, நேரு வீதி சந்திப்பு, காமராஜா் சதுக்கத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் பாவாணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் மங்கையா்செல்வன், துணைத் தலைவா்கள் சிவ.வீரமணி, வீரமோகன், மல்லிகா சங்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.
நேரு வீதியை போலீஸாா் இரும்பு தடுப்புக் கொண்டு தடுத்தனா். பின்னா் நேரு வீதியில் கடை, கடையாகச் சென்று தமிழில் பெயா்ப் பலகை வைக்கும்படி வலியுறுத்தினா். மேலும், ஒரு சில கடைகளில் முற்றுகையிட முயன்றனா்.
ஒரு பிரிவினா் காமராஜா் சாலையில் வணிக நிறுவனங்களில் ஆங்கிலத்தில் இருந்த பெயா்ப் பலகையை அடித்து நொறுக்கினா். உருட்டுக் கட்டையுடன் 5-க்கும் மேற்பட்ட கடைகளின் மேல்மாடிக்கு சென்று பெயா்ப் பலகைகளை உடைத்து சேதப்படுத்தினா். இது தொடா்பாக பெரியகடை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.